ஜகார்த்தா: கிழக்கு இந்தோனேசியாவில் பெய்த கன மழையை அடுத்து ஏற்பட்ட பேரழிவுகளில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டின் கிழக்கு நுசா தென்காரா மாகாணத்தில் உள்ள அடோனாரா தீவில் நள்ளிரவுக்கு மேல் டஜன் கணக்கான வீடுகள் சரிந்து விழுந்துள்ளன.
இதில், இதுவரை 40க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளதாக அந்நாட்டின் பேரிடர் நிவாரண நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் இத்தீவுகளை விட்டு இடம்பெயர்ந்து வரும் நிலையில், உயிரிழந்த 38 பேரின் உடல்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
தவிர, கன மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 17 பேர் பலியாகியுள்ளதாகவும், 42 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு, குப்பைகளால் மூடப்பட்ட சாலைகள், அடர்த்தியான மண் அடுக்குகள் உள்ளிட்ட காரணங்களால் நிவாரணப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நேற்று (ஏப்.04) அதிகாலை 1.42 ,மணியளவில் அந்நாட்டின் மாலுகு தீவில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கிழக்கு இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்