தனது வடகிழக்குப் பிராந்தியங்களில் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் வெளிநாட்டுச் சக்திகள் தலையிட இந்தியா ஒருபோதும் அனுமதித்ததில்லை. அதேவேளை, அண்மையில் ராஜினாமா செய்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்த இந்தியா, வடகிழக்குப் பகுதிகளில் ஜப்பானிய திட்டங்களுக்கு அனுமதி அளித்தது.
இது குறித்து வெளியுறவுத்துறை தூதராக இருந்த ராஜீவ் பாட்டியா நமது ஈடிவி பாரத்திடம் பேசுகையில், "வடகிழக்கு விவகாரங்களில் எப்போதும் எச்சரிக்கை உணர்வோடு இருக்கும் இந்தியா, அப்பகுதியில் ஜப்பான் நாட்டுத் திட்டங்களுக்கு அனுமதியளித்தது. இது பிரதமர் அபே மீது இந்திய வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு.
வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சியில் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முக்கியப் பங்கு வகிக்கின்றது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா கிழக்காசிய நாடுகள் நோக்கிய கொள்கையில் தீவிரம் காட்டத் தொடங்கியது. இருநாட்டு உறவை மேம்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இதில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.
ஜப்பானின் கிழக்கு கடற்கரைத் தொடங்கி ஆப்ரிக்காவின் கிழக்கு கடற்கரை வரை, இந்தோ-பசிபிக் பிராந்தியம் உள்ளது. 10 நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் (ASEAN) நாடுகளின் உறுப்பினரான இந்தியாவும் ஜப்பானும் அமைதி, வளர்ச்சிக்குப் பங்குவகிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளன.
2018ஆம் ஆண்டு இந்தியா-ஜப்பான் உச்சி மாநாட்டில் இருநாட்டுத் தலைவர்களும் கலந்துகொண்டு, பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் உறுதியுடன் செயல்பட முடிவெடுத்தனர். இதன் பகுதியாகவே, கிழக்காசிய கொள்கையை தீவிரப்படுத்திய இந்தியா, பல்வேறு திட்டங்களை ஜப்பானுடன் மேற்கொண்டது. ஜப்பானுடன் வரலாற்றுப் பாரம்பரிய தொடர்புகொண்டுள்ள வடகிழக்குப் பகுதிகளிலும் இந்த வளர்ச்சித் திட்டங்கள் கையெழுத்திடப்பட்டன.
2012-20 ஆண்டு காலகட்டம் இந்தியா-ஜப்பான் இடையே பொற்காலமாகக் கருதப்படுகிறது. இதன் முக்கிய அம்சமாகத் திகழ்வது மோடி-ஷின்சோ அபே இடையிலான நட்புறவு ஆகும். 2014ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்ற மோடி, அங்கு இருநாட்டு உறவுக்கு மூன்று முக்கிய அம்சங்களை மையப்பொருளாக முன்வைத்தார்.