இந்தியா - நேபாள் நாடுகளுக்கிடையேயான ராஜரீக உறவில் விரிசல் ஏற்படும் வகையிலான நகர்வு அண்மையில் நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளம், இரு நாடுகளின் எல்லையில் உள்ள காலாபானி பகுதி தங்களுடையது என்றும் இந்தியா தனது வரைபடத்தில் அதைத் தனது பகுதியாக தவறுதலாக வைத்துள்ளது எனவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதை உடனடியாக மறுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, நேபாளம் குறிப்பிட்டுள்ள அப்பகுதி இந்தியாவுடையதே எனத் தெளிவான பதிலை அளித்துள்ளது.
சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பின், ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களைக் கொண்ட புதிய வரைபடத்தை இந்தியா வெளியிட்டபின் தான் இத்தகைய குழப்பங்கள் நிலவத் தொடங்கியுள்ளது. இந்திய - நேபாள எல்லைப்பகுதியான காத்மாண்டுவை ஒட்டியுள்ள இந்தியாவின் பகுதிகளான காலாபானி மற்றும் லிபு லேக் தங்களுக்குச் சொந்தமானது என நேப்பாள் நாட்டு வெளியுறவுத் துறை அண்மையில் கூறிவருகிறது. அதைத் தொடர்ந்து காலாபானி நேபாளம் நாட்டைச் சேர்ந்தது எனவும், இதுகுறித்து இரு நாட்டின் செயலாளர்களும் இனைந்து பேசி தீர்வு காண்போம் என வெளியுறவுத் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இதை மறுக்கும் விதமாக இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய வரைபடமானது இந்திய இறையாண்மையை உறுதிப்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்ட ஆவணம். இதில் விவாதத்திற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை. அதேவேளை இருநாடுகளும் இணைந்து நல்லுறவை பேண அனைத்து விதமான நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்படும் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ராவிஷ் குமார் தெரிவித்துள்ளார்.