மாலத்தீவு நாட்டில் தட்டம்மை எனப்படும் கொடிய அம்மை நோயை ஒழித்துவிட்டதாகக் கூறினாலும், கடந்த வாரம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் நான்கு பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாலத்தீவில் மீண்டும் தட்டம்மை பரவும் அபாயம் ஏற்படுமோ என்ற பீதியடைந்தது அந்நாட்டு அரசு.
இதைத்தொடர்ந்து தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி மருந்துகளை அவசரமாக அனுப்பி உதவுமாறு அந்நாட்டு அரசு, இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்தது. இதனால் துரித கதியில் செயல்பட்ட இந்திய அரசும், டெல்லியில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா என்ற தனியார் நிறுவனத்திடம் 30 ஆயிரம் டோஸ் தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்து மூன்றே நாள்களில் அனுப்பி உதவி புரிந்துள்ளது.
இந்தத் தடுப்பூசி மருந்துகளை அவசரமாக அனுப்பிவைக்குமாறு டென்மார்க், ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் ஆகியவற்றைத்தான் மாலத்தீவு அரசு முதலில் அணுகியது. ஆனால் நான்கு வார காலம் பிடிக்கும் என அவை தெரிவித்துவிட்டன.
இந்நிலையில்தான் மாலத்தீவு நாடு கேட்ட அளவுக்கு இந்த தடுப்பூசி மருந்துகளை மூன்றே நாட்களில் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இந்த தடுப்பூசி மருந்துகளை மாலத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் சுதிர் மூலம் அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் கடந்த புதனன்று வழங்கப்பட்டது.
சுகாதாரம் தொடர்பாக இந்தியாவின் இந்தத் துரித செயல்பாடு இரு நாடுகளிடையேயான நல்லுறவுக்கு மேலும் வலிமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. இது குறித்து மாலேவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாலத்தீவு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்தியா மேற்கொண்ட இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையேயான அண்டை நாடுகளுக்கு ஒத்துழைப்பு மற்றும் உதவுவதில் முன்னுரிமை என்ற கொள்கையை வெளிப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
கடந்த ஜூன் 2019ஆம் ஆண்டு மாலத்தீவுக்கு பிரதமர் மோடி சென்றபோது, இரு நாடுகளுக்கும் இடையேயான சுகாதார ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் மருத்துவர்களுக்கும் மருத்துவம் தொடர்பான நிபுணர்களுக்கும் போதிய பயிற்சி வழங்குவது, நோய் தடுப்பு நடவடிக்கை, உளவியல் தொடர்பான பயிற்சிகள் போன்றவற்றை வழங்கி இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டித் தீவான மாலத்தீவின் சுகாதார மேம்பாட்டுக்கு உதவ இந்தியா முன்வந்தது. மேலும் டாடா நினைவு புற்றுநோய் மையம் சார்பில் 800 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த புற்றுநோய் மருத்துவமனையை அங்கு அமைக்கவும் முன் வந்தது.
மாலத்தீவில் யாமீன் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில், இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான உறவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. பின்னர் அங்கு தேர்தல் நடந்து இப்ராஹிம் சோலிஹ் அதிபராக வந்த பின் மீண்டும் நல்லுறவு சூழல் உருவானது.
மாலத்தீவுக்கு தற்போது தடுப்பூசி அனுப்பி உதவி செய்தது போல மனிதாபிமான அடிப்படையில் அந்நாட்டுக்கு அவசர கால உதவிகளை இந்தியா பலமுறை தக்க நேரத்தில் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்நாட்டு தலைநகர் மாலேவில் அமைக்கப்பட்டிருந்த பிரதானமான தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் 2015-ல்செயலிழந்ததால் குடிதண்ணீருக்கு தட்டுப்பாடாகிவிட்டது. இதனால் நள்ளிரவு நேரத்தில் இந்தியாவின் உதவியை நாடியது மாலத்தீவு. உடனடியாக விமானங்கள் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டதுடன், கப்பல் மூலமும் தண்ணீரை அனுப்பி வைத்தது இந்தியா. அது மட்டுமின்றி சுத்திகரிப்பு நிலையம் ஒன்றையும் நிறுவி தந்தது.
அதேபோல், சுனாமியின்போது கடும் பாதிப்புக்கு ஆளான பல நாடுகளில் மாலத்தீவும் ஒன்று. அப்போது சுற்றுலா மூலமான வருவாயை மட்டுமே சார்ந்துள்ள மாலத்தீவுக்கும், இந்தப் பிராந்தியத்திலேயே உதவிய முதல் நாடு இந்தியாதான். 1988ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, மாலத்தீவில் அதிபராக இருந்த மாமூன் அப்துல் கயூமுக்கு எதிராக மாபெரும் சதி நடந்தது. இதனால் அதிபர் கயூம், இந்தியாவிடம் உதவியை நாடினார். இதனால் இந்தியப் படை வீரர்களை போர் விமானங்களில் விரைந்து அனுப்பியது இந்தியா. ஆபரேசன் காக்டஸ் என்ற பெயரில் சதிகாரர்களை முறியடித்து அந்நாட்டை சதிகாரர்களிடம் இருந்து மீட்டெடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாலத்தீவுக்கு கை விரித்த டென்மார்க், கரம் கொடுத்த இந்தியா