ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் குற்றஞ்சாட்டப்படும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த முன்வடிவை எதிர்த்து, கடந்த ஆண்டு அங்கு போராட்டங்கள் வெடித்தன.
மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பல தரப்பினரும் கைகோர்த்ததால் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது.
இந்த போராட்டங்களின் உச்சமாக அக்டோபர் மாதம் பெரிய அளவிலான பேரணி நடைபெற்றது. அனுமதியை மீறி நடைபெற்ற இந்த சீன எதிர்ப்பு பேரணியை ஜனநாயக ஆர்வலர்கள் ஒருங்கிணைத்தனர்.
சீனா தனது ராணுவத்தை பயன்படுத்தி ஹாங்காங் போராட்டத்தை ஒடுக்கியது. இதனிடையே, ஏறத்தாழ 850 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஜனநாயக ஆதரவாளர்களில் மிக முக்கியமானவராக கருதப்படும் டிமோசிஸ்டோ கட்சியின் தலைவரான ஜோசுவா வோங் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஓராண்டு கடந்து இன்று மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார். கோவிட்-19 பரவல் தடுப்பு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி பொது இடங்களில் சுற்றிய காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். ஜோசுவா வோங் எதிராக மூன்றாவது முறையாக வழக்கு பதியப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.