இங்கிலாந்தின் கட்டுப்பாட்டிலிருந்த ஹாங்காங் 1997ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்புத் தகுதிபெற்ற பிராந்தியமாக ஹாங்காங் விளங்கிவருகிறது.
இந்நிலையில், ஹாங்காங் குற்றவாளிகளைச் சீனாவுக்கு நாடு கடத்தும் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்துவருகின்றன. வார இறுதி நாட்களில் நடைபெறும் இப்போராட்டங்களை எந்த ஒரு அமைப்பும் தலைமை வகிக்காமல் இளைஞர்களும் பொதுமக்களும் ஒன்றிணைந்து வழி நடத்திவந்தனர்.
சட்டத்திருத்த மசோதாவை முழுமையாகக் கைவிட வேண்டும், காவல் துறையின் கண்மூடித்தனமான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
இதனிடையே, போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையான சர்ச்சைக்குரிய கைதிகள் பரிமாற்ற மசோதாவை முழுமையாக திரும்பப்பெறுகிறோம் என ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லாம் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி அறிவித்தார். இதனால், ஹாங்காங்கில் போராட்டங்கள் படிப்பதாகக் குறைந்துவந்தது. இந்த நிலையில், மீண்டும் போராட்டங்கள் நடைபெறாமலிருக்க அப்பிராந்திய அரசு முகமூடி அணிவதற்கு தடைவிதித்தது. அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி கொண்டுவரப்பட்ட இந்தத் தடை அங்குள்ள இளைஞர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், மீண்டும் வீதியில் இறங்கி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, அரசின் முகமூடி தடையை ரத்து செய்து ஹாங்காங் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.