சீனாவில் தோன்றி உலகைச் சூறையாடி வரும் கரோனா பெருந்தொற்று காரணமாக உலகமே ஸ்தம்பித்துள்ளது. நோய்ப் பரவலைத் தடுக்க உலக நாடுகள் தேசிய அளவில் ஊரடங்கு பிறப்பித்துள்ளதால் உலகப் பொருளாதாரம் சீர்குலையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதேவேளையில், கரோனா பெருந்தொற்றின் முதல் அலையை, ஹாங்காங் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்காமலும், அதிகளவில் உயிர்ச்சேதமின்றியும் நிலைமையைச் சமாளித்துவிட்டதாக லாண்ஸெட் இதழில் வெளியான ஆய்வுக்கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைகளுக்குச் சீல் வைத்தல், தனிமைப்படுத்துதல், நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகிய கூட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் ஹாங்காங் பெரும் ஆபத்தை தவிர்த்துவிட்டது என்கின்றனர் அந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள்.
இந்த ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் பென்ஜமின் கவுங்லிங் கூறுகையில், "சீனா, அமெரிக்கா, மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளைப் போன்று அழிவைக் கொண்டுவரக்கூடிய ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்காமல், தேவையான பொதுச் சுகாதார நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொண்டு ஹாங்காங் காரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
ஹாங்காங்கின் வெற்றியிலிருந்து மற்ற நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் பங்களிப்போடு இந்த நடவடிக்கைகளை அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டால் பதற்றத்தையும், நோய் பாதிப்பையும் பெருமளவு தவிர்க்க முடியும்" என்றார்.
ஹாங்காங்கிற்கு கைகொடுத்த நடவடிக்கைகள்:
1. வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மட்டுமின்றி, உள்ளூர் வாசிகளையும் ஹாங்காங் தீவிரமாகச் சோதனையிட்டது. மார்ச் மாத தொடக்கத்தில் ஒருநாளைக்கு 400 வெளி நோயாளிகளும், 600 உள்நோயாளிகளும் சோதனை செய்யப்பட்டனர்.