ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த ஹாங்காங், 1997ஆம் ஆண்டு சீனாவின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. 'ஒரு நாடு இரு அமைப்பு' என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்நாடிற்குத் தன்னாட்சி தரப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், ஹாங்காங்கை சுதந்திர நாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
அதன் ஒரு அங்கமாக, 'குளோரி டு ஹாங்காங்' என்ற பெயரில் புரட்சிகர பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அது அரசியல் சார்புடையது எனக் கூறி அப்பாடலுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு அலுவலகத்தை சீனா தொடங்கியுள்ளது. இதன் திறப்பு விழாவில், நிர்வாக தலைவர் கேரி லாம், கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். கொடியேற்ற நிகழ்ச்சியின்போது, அலுவலகத்திற்கு வெளியே சீனக் கொடி ஏற்றப்பட்டது.