ஹாங்காங்கில் இருந்து குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜுன் மாதம் முதல் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இப்போராட்டத்திற்கு எந்த ஒரு அமைப்பும் தலைமை வகிக்காமல் இளைஞர்கள் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை வழிநடத்தி வருகின்றனர். சட்டத் திருத்த மசோதாவை முழுமையாக கைவிட வேண்டும், காவல்துறையின் கண்மூடித்தனமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்கள் பல வேளைகளில் வன்முறையில் முடிகிறது.
இந்த நிலையில், இப்போராட்டங்களை வழிநடத்தி வந்த டெமோசிஸ்டோ என்ற அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்து வரும் ஜோஷ்வா வாங் போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இது பற்றி ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ள டெமோசிஸ்டோ அமைப்பு, ஜோஷ்வா வாங் இன்று காலை 7.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் அத்துமீறி கைது செய்ததோடு வலுக்கட்டாயமாக ஒரு தனியார் வாகனத்தில் அவரை ஏற்றிச் சென்றதாகவும் அறிவித்துள்ளது. ஜோஷ்வா வாங் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தங்களது வழங்கறிஞர்கள் குழு மூலம் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஜுன் மாதம் முதல் இதுவரை ஹாங்காங் போராட்டத்தில் ஈடுபட்ட 800க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை கண்டித்து அடுத்த வாரம் போராட்டம் நடத்த ஜோஷ்வா வாங் ஏற்பாடு செய்து வந்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக டெமோசிஸ்டோ தெரிவித்திருக்கிறது.