லடாக் எல்லைப் பகுதியில் இந்திய-சீன ராணுவத்தினர் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மோதல் போக்கு இருந்துவருகிறது. இதன் காரணமாக, இருதரப்பு ராணுவத்தினரும் அங்கு குவிந்துள்ளனர்.
இந்த மோதலுக்குச் சுமுக தீர்வுகாணும் நோக்கில் உயர்மட்ட அளவில் தொடர் பேச்சுவார்த்தை நடந்துவரும் சூழலில், கடந்த திங்கள்கிழமை (ஜூன் 15) கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு ராணுவத்தினரும் திடீரென பயங்கர கைகலப்பில் ஈடுபட்டனர்.
சுமார் ஏழு மணி நேரம் நீடித்த இந்த மோதலில், 20 இந்திய ராணுவத்தினர் வீரமரணமடைந்தனர். இது இந்தியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய தேசியவாதிகளை எச்சரித்து 'குளோபல் டைம்ஸ்' என்ற சீன அரசு நாளிதழில் கட்டுரை வெளியாகியுள்ளது.
'China-India border paramount' என்ற தலைப்பில் குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஹு ஜின்ஜிங் எழுதியுள்ள அந்தக் கட்டுரையில், "இந்திய தேசியவாதிகளுக்கு நான் எச்சரிப்பது இதுதான்: ஆயுதம் இல்லாத மோதலிலேயே உங்கள் வீரர்களைச் சீனப் படையினர் வீழ்த்தும்போது, நாங்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்தால் என்னவாகும் என்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள்.