கரோனா ஊரடங்கால் சாலை, கடல், வான்வெளிப் போக்குவரத்து, தொழில் துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறைந்துள்ள காரணத்தால், கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றம் பில்லியன் டன்களுக்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் 17 விழுக்காடு வரை, கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இன்னும் சில நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.
ஏற்கெனவே அறிவியலாளர்கள் பலர் சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, கார்பன்-டை-ஆக்ஸைடால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்கப் போராடி வரும் நிலையில், இந்த ஆண்டு ஊரடங்கால் நான்கு முதல் ஏழு விழுக்காடு வரை கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றம் குறையும் என்று கணித்துள்ளனர்.
ஆனால், எந்த அளவுக்கு மக்கள் பாதுகாப்பாகவும், விரைவாகவும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறார்களோ, அதைப் பொறுத்து இந்த அளவீடு மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.