இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவணே நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்மூலம், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய வளைகுடா நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் செய்த முதல் இந்திய ராணுவத் தளபதி என்ற பெருமையை நரவணே பெற்றுள்ளார்.
இந்தப் பயணத்தில், இரு நாடுகளின் ராணுவத் தளபதிகளையும், மூத்த ராணுவ அலுவலர்களையும் சந்தித்து இருநாடுகளுக்கு இடையே பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து நரவணே சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.
தனது பயணத்தின் இரண்டாவது கட்டமாக சவுதி அரேபியா சென்றுள்ள ராணுவத் தளபதி நரவணே, அந்நாட்டின் மூத்த பாதுகாப்பு அலுவலர்களுடன் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்து குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ராயல் சவுதி தரைப்படைத் தலைமை அலுவலகம், கூட்டுப்படை கட்டுப்பாடு தலைமையகம், மன்னர் அப்துல் ஆசிஸ் ராணுவ அகாதமி ஆகியவற்றையும் ராணுவத் தளபதி பார்வையிடுகிறார். சவுதியில் உள்ள தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் ராணுவத் தளபதி அங்குள்ள மாணவர்களுடனும், பேராசிரியர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.