உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் ஐந்து லட்சத்தை தாண்டுகிறது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், பிரேசில், நியூசிலாந்து, பொலிவியா ஆகிய நாடுகளில் இருந்து சீனாவிற்கு இறக்குமதியான பதப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி பாக்கெட்களில் கரோனா வைரஸை கண்டறிந்துள்ளதாக அந்நாடு அதிர்ச்சியூட்டும் தகவலை ஒன்று வெளியிட்டுள்ளது.
கிடைத்த தகவலின்படி, சுகாதார ஆணையம் பிரேசிலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சியை சோதனை செய்தது. அதில், இரண்டு உணவு பேக்கேஜில் கரோனா வைரஸ் தொற்றை கண்டறிந்துள்ளனர். அதில், ஒன்று பிரேசிலில் இருந்து கொண்டு வரப்பட்டு குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கப்பட்டிருந்த மாட்டிறைச்சியும், மற்றொருன்று வியட்நாமில் இருந்து கொண்டுவரப்பட்ட பதப்படுத்தப்பட்ட பாசா மீன் ஆகும்.
இதேபோல், கடந்த டிசம்பர் 5ஆம் தேதி, உணவு பாக்கெட்டில் கரோனா தொற்று உறுதியானதால், ஹீலொங்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான ஹார்பினில் குறைந்தது 43 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். பல இடங்களில், இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவு பாக்கெட்களில் கரோனா பாதிப்பு ஏற்படுவதால், அதனை தடுத்திட சீன அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சீனாவில் இதுவரை 93,577 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,746 பேர் உயிரிழந்துள்ளனர்.