பாரிஸ்:அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட புதிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டமைப்பை கடந்த வாரத்தில் அறிவித்தன.
இந்தக் கூட்டமைப்பின் அடிப்படையில், அணு ஆயுதத்தை ஏவும் திறன் கொண்ட 8 நீர்மூழ்கி கப்பல்களைத் தயாரிக்க தேவையான தொழில்நுட்பத்தை ஆஸ்திரேலியாவுக்கு வழங்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தச் செயல் பிரான்ஸ் அரசாங்கத்தை கோபமடையச் செய்துள்ளது. டீசல் மற்றும் மின்சாரத்தில் செயல்படும் 12 நீர்மூழ்கி கப்பல்களை வாங்க 66 பில்லியன் டாலர் மதிப்பில் பிரான்ஸுடன் ஆஸ்திரேலியா கடந்த 2016ஆம் ஆண்டே ஒப்பந்தம் செய்திருந்தது.
அந்த ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்துவிட்டு அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரம் காரணமாக, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் உள்ள தங்களது நாட்டு தூதர்களை பிரான்ஸ் திரும்பப் பெற்றுக்கொண்டது.