எபோலா, ஜிகா, பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், சார்ஸ் என உலகத்தை உலுக்கும் வகையில் திடீரென்று வேகமாக பரவும் நோய்கள் அவ்வப்போது வந்து செல்லும்.
இந்த வரிசையில் புதிய வரவான கரோனா வைரஸ், தற்போது சர்வதேச நாடுகளையும் அச்சநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இறைச்சி விற்பனைச் சந்தையில் நோய் பாதிக்கப்பட்ட விலங்கின் இறைச்சியில் இருந்து இந்த வைரஸ் பரவத் தொடங்கியிருக்கலாம் என அறியப்படுகிறது.
ஏன் இந்த திடீர் பதற்றம்?
கடந்த மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் திடீரென காய்ச்சல் ஒன்று பரவத் தொடங்கியது. அந்த காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அண்டை மாகாணங்களான ஷாங்காய், பெய்ஜிங், சியாங் ஆகிய பகுதிகளிலும் இது வேகமாகப் பரவியது.
சீனாவில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம் அமெரிக்காவில் இந்நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனே உலக நாடுகளுக்கு அலாரம் அடித்தால் போல், பரபரப்புத் தொற்றிக்கொண்டது.
சீனாவுக்குப் பயணம் செய்த வெளிநாட்டினர் பலரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள மெள்ள மெள்ளத் தெரியவந்தது. பயணிகள் விமானம் மூலம் வைரசும் பயனம் செய்து தற்போது அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான், தைவான், தாய்லாந்து, மெக்ஸிகோ என பல்வேறு நாடுகளில் இந்த நோய் தீவிரமாகப் பரவி வருகிறது.
கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க அனைத்து நாட்டு அரசுகளும் தங்கள் விமானநிலையங்களை உஷார் நிலையில் வைத்து பயனிகளை தீவிரமாக பரிசோதித்து வருகின்றன. சீனாவில், வூகான் மாகாணம் உள்ளிட்ட நோய் பரவியுள்ள முக்கிய பகுதிகளில், பொதுப்போக்குவரத்து வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.