சிறு வயது முதலே முதலாளி தான் தன்னுடைய உலகம் என செல்லப் பிராணிகள் வாழ்ந்து வருவார்கள். குறிப்பாக செல்லப்பிராணி நாய் மனிதனுக்கு நண்பனாகவே பழங்காலத்திருந்து தற்போது வரை இருந்து வருகிறது. காலையில் நம்மை தட்டி எழுப்புவதில் தொடங்கும் நாய்க்குட்டியின் பயணமானது இரவு வரை மகிழ்ச்சியான தருணங்களுடன் தொடர்கிறது.
நாயின் சேட்டைகளுக்கும் பஞ்சம் இருக்காது. இத்தகைய பேரன்பை கொண்டுள்ள நாயால், நம்முடையே இழப்பை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்ற கேள்விக்கு பதிலாக சீனாவின் வூஹான் நகரில் நடந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் செயல்படும் தைகாங் மருத்துவமனையில் கரோனாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு கரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட ஒருவர், ஐந்து நாள்களில் உயிரிழந்தார். அப்போது, அவருடன் மருத்துவமனைக்கு வந்த அவரின் செல்லப்பிராணி, உரிமையாளர் வந்து விடுவார் என்ற நம்பிக்கையிலே இருந்துள்ளது. இதைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்களும் நாயை விரட்ட மனமின்றி தினம்தோறும் உணவளித்து வந்துள்ளனர். சுமார் மூன்று மாதங்களாக அதே இடத்தில் காத்திருந்த நாய்க்குட்டியின் பாசம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.