சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனோ வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தும் உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ளது. இந்த கொரோனோ வைரஸ் தாக்குதல் காரணமாக இதுவரை 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் உலக அளவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனோ வைரஸ் காரணமாக அனைத்து நாடுகளும் சீனாவுடனான போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து தொடர்பையும் துண்டித்துள்ளன. மேலும் சீனாவில் உள்ள பிற நாட்டவர்கள் தங்களின் நாடுகளுக்கு திரும்பிவருகின்றனர். இவ்வாறு அனைவரையும் கதிகலங்கச் செய்துள்ள இந்த கொரோனோ வைரஸ் குறித்து முதன்முறையாக எச்சரிக்கை விடுத்த மருத்துவர் லீ வென்லியாங் என்பவர் அதே வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
வுகான் நகரில் உள்ள மருத்துவமனையில் லீ வென்லியாங் மருத்துவராக பணியில் இருந்தார். இதனிடையே வுகான் நகரில் உள்ள கடல்வாழ் உயின சந்தையில் இருந்துவந்து லீயிடம் பரிசோதனை மேற்கொண்ட ஏழு பேருக்கு வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சார்ஸ் வகை வைரஸ் என கருதிய லீ, தனது பள்ளி நண்பர்கள் இருக்கும் சமூக வலைதள குழு ஒன்றில் இது குறித்து பகிர்ந்துவிட்டு அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுரை கூறி வீடியோவை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து வதந்தியை கிளப்பும்படியான வீடியோவை பதிவிட்டதாக கூறி வுகான் நகர காவல் துறையினர் லீயை எச்சரித்தனர்.
ஆனால் அதன்பின் அந்த வைரஸ் கொரோனோ வைரஸ் என கண்டறியப்பட்டது. மேலும் அந்த வைரஸின் தாக்குதல் தற்போது வரை தினந்தோறும் உயிரிப்பலியை ஏற்படுத்திவருகிறது. பின்னர் கொரோனோ வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த லீ வென்லியாங், கடந்த ஜனவரி 12ஆம் தேதி அவர் வேலை பார்த்த அதே மருத்துமனையிலேயே அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி கொரோனோ பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன்பின் லீயின் நிலை குறித்தும் அவர் இறந்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே மருத்துவர் லீ வென்லியாங் கொரோனோ பாதிப்பால் பிப்ரவரி 7ஆம் தேதி அதிகாலை 2.58 மணியளவில் உயிழந்துவிட்டதாக அவர் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பலமுறை முயற்சித்தும் அவரை காப்பாற்ற இயலவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து லீயின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து பொதுமக்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
மேலும் லீ வெல்லியாங்கிடம் வுகான் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும், எங்களுக்கு பேச்சுரிமை வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் அங்குள்ள சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்யப்பட்டன. கொரோனோ வைரஸ் பாதிப்பு குறித்த அரசு நடவடிக்கை மீது மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும், மருத்துவர் லீயின் மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு வுகான் நகருக்கு செல்லும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.