கோவிட்-19 வைரஸ் தொற்று கடந்தாண்டு இறுதியில் சீனாவில் பரவத்தொடங்கியது. சீனாவில் இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் இதனால் 3,255 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக வூஹான் மாகாணம் முழுவதும் சுமார் ஒரு மாத காலம் முடக்கப்பட்டது. அதேபோல, சீனாவின் மற்ற பகுதிகளிலுள்ள மக்களும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சீன மக்கள் வீடுகளில் தங்களைத் தாங்களே குடும்பத்தினருடன் தனிமைப்படுத்திக் கொண்டனர். இதனால் வேறுவழியின்றி, தம்பதிகள் ஒன்றாக அதிக நேரம் செலவிடும் சூழ்நிலை ஏற்பட்டது.
சீனாவில் தற்போது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சீராகி, அலுவலகங்கள் ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டுவருகின்றன. அலுவலகங்கள் திறக்கப்பட்டதும், அதிர்ச்சியளிக்கும்விதமாக விவாகரத்து விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன.
தம்பதிகள் ஒன்றாக நேரம் செலவிடுவதன் மூலம் அவர்களுக்குள்ளான நெருக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விவாகரத்து மனுக்கள் அதிகமாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் திருமண பதிவேடு அலுவலக மேலாளர் லு ஷிஜுன், "தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதன்மூலம் தம்பதிகள் ஒன்றாக அதிக நேரம் செலவிடும் சூழல் ஏற்படுகிறது. அப்போது அவர்களுக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் எழுகின்றன. இதனால் ஏற்படும் சண்டைகள் விவாகரத்தில் முடிகிறது" என்று கூறினார்.
இதையும் படிங்க: கோவிட்-19 இத்தாலியில் ஒரேநாளில் 627 பேர் உயிரிழப்பு