மத்திய தேசமும் அளப்பறியா லட்சியமும்
சீன மாண்டரின் மொழியில், சீனா என்ற சொல்லுக்கு 'மத்திய தேசம்' - அதாவது உலகின் மையம் என்று பொருள். தன்னை தன்நிகரற்ற சக்தியாகக் கருதும் சீனா, மற்ற நாடுகளுடன் ஒத்துழைக்க மறுக்கிறது.
இந்தியா, சீனா என உலகின் இரண்டு மிகப் பழமையான நாகரிகங்களைப் பிரிப்பது இமயமலை தான். இந்தியாவுடன் சீனா எப்போதும் நல்லுறவிலிருந்து வருவதாக அந்நாட்டுத் தலைவர்கள் கூறிவருகிறனர். நவீன யுகத்துக்கு முந்தைய காலத்தில் வேண்டுமானாலும் அது உண்மையாக இருக்கலாம். 1950களில் இருந்து சீன கம்யூனிஸ்ட் கட்சி, இருநாட்டு நல்லுறவுகளைத் தொடர்ந்து சோதித்துக் கொண்டேதான் வருகிறது.
சீனாவின் பொருளாதாரம், ராணுவ வளர்ச்சியுடன் அவர்களின் லட்சியமும் ஆஜானுபாகுவாக வளர்ந்து வருகிறது. 2017இன் படி சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிஎஸ்டி) மதிப்பு 12 ட்ரில்லியன் டாலர் (12 லட்சம் கோடி டாலர்), இது இந்தியாவை விட நான்கு மடங்கு அதிகமாகும். அப்படியானால், பாதுகாப்புத் துறையில் அவர்களின் பட்ஜெட் எத்தனை பெரியதாக இருக்கும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்.
ராணுவத்தை நவீன மயமாக்குவதில் சீனாவுக்கு ஈடுயிணையில்லை. அடுத்து ஐந்தாண்டுகளில் சீன கடற்படையில் புதியதாக 80 கப்பல்கள் சேர்க்கப்படவுள்ளதாக இந்திய கடற்படை தளபதி சுனில் லம்பா கூறுகிறார். கடந்த 200 ஆண்டுகளில் இதுபோன்று எந்த ஒரு ராணுவமும் அசுர வேகத்தில் வளர்ந்ததில்லை. 2020க்குள் சீன ராணுவம் மூன்று விமானந்தாங்கிகளை பெறப்போகிறது.
ஜீரணிக்கமுடியாத உண்மை
பொருளாதாரம், ராணுவம், இப்போது தொழில்நுட்பம் என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாளும் சீனா இந்தியாவை விடப் பலமடங்கு பலம்வாய்ந்தே இருக்கிறது என்பதே ஜீரணிக்கமுடியாத உண்மை. இதுகுறித்து முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் பேசுகையில், "சீனா-பாகிஸ்தான் இடையேயான அசைக்கமுடியாத கூட்டணி இந்தியாவுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதே நிதர்சனமான உண்மை" என்றார்.
சீனாவின் செல்லப் பிள்ளை
இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் பாகிஸ்தான், சீனாவின் செல்லப்பிள்ளையாகும். அதற்குப் பரிசாகப் பாகிஸ்தானுக்கு நிதியுதவிகளோடு, ஏவுகணை, அணு ஆயுதம் உள்ளிட்ட ராணுவ உதவிகளையும் வாரி இறைக்கிறது சீனா. பயங்கரவாதத்திற்கு எதிராகப் பேசிவரும் அதே சீனாதான், இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றிய மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதி என்று முத்திரைக்குக் குத்த ஐநாவின் முயற்சியை 10 ஆண்டுகள் இழுத்தடித்தது.
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி மற்றும் புகலிடம் அளித்து வருவதாக பாகிஸ்தானை கடுமையாக சாடியுள்ள, சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு (Financial Action Task Force) அதனைத் தடைசெய்யப்பட்ட நாடுகள் பட்டியலில் (Black List) சேர்க்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.