சீனாவில் கரோனா வைரஸினால், இதுவரை 900 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகப்படியாக ஹூபே மாகாணத்தில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு இந்நோய் பரவிவருகிறது.
இதன் விளைவாக சீனாவில் பெரும்பாலான பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில், சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தைச் சேர்ந்த 33 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த மாத இறுதியில் உடல்நிலை சரியில்லாமல் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் அவருக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பது தெரிந்ததால், அவர் தீவிர சிகிச்சைக்காக ஷாங்க் லு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து பிப்ரவரி 7ஆம் தேதி அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையை பரிசோதித்ததில், குழந்தைக்கு கரோனா வைரஸால் பாதிப்பு ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் குழந்தை வேறு அறைக்கு மாற்றப்பட்டு கவனிக்கப்பட்டுவருகிறது. ஆரோக்கியமாக குழந்தையை பெற்றதில் அப்பெண்மணியும் மருத்துவர்களும் ஆறுதல் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா பீதி - 'சிக்கன் சாப்பிடலாம்; பயப்பட வேண்டாம்'