சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வுஹான் நகரில் முதலில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் சீனா முழுவதும் மிக வேகமாக பரவியது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, சீனாவில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
இதனால் வுஹான் நகரில் சிக்கித் தவித்த இந்தியர்கள் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அங்கு சிக்கியிருந்த ஆறு மாலத்தீவு நாட்டை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 406 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் அழைத்துவரப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்காக டெல்லியிலுள்ள இந்தோ திபத் எல்லை காவல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவர்கள் யாரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தோ திபத் எல்லை காவல் படை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. முகாமிலுள்ள அனைவரும் திங்கள்கிழமை விடுவிக்கப்படவுள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: ஜப்பான் கப்பலில் தொடரும் கொரோனா - 355 பேர் பாதிப்பு