சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ அரசுமுறைப் பயணமாக இந்த மாதம் இந்தியா வரவுள்ளார்.
பயணத்தின் போது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசவுள்ள வாங் யீ, இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை, பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் மாலமல்லபுர சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை செயல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு (Regional Comprehensive Economic Partnership - RCEP) ஒப்பந்தம் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் இடம்பெற உள்ளது.
வாகன விற்பனை சரிவு - உற்பத்தியை நிறுத்தும் அசோக் லேலண்ட்!
கடந்த மாதம் நடைபெற்ற ஆசியன் உச்சிமாநாட்டின் போது RCEP ஒப்பந்தத்தில் கையெழுத்திட போவதில்லை என இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. RCEP ஒப்பந்தம் உள்நாட்டு நிறுவனங்கள், விவசாயிகளுக்கு பாதகமாக அமையும் என்பதே இந்தியாவின் வாதமாக உள்ளது.
"இருநாடுகளுக்கும் இடையேயான அனைத்து பிரச்னைகளும் இந்தப் பேச்சுவார்த்தையில் இடம்பெறும்" என வெளியுறுவுத் துறைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் எல்லைப் பிரச்னைகள் குறித்தும் பேச்சுவார்தை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.