இந்திய எல்லைப் பகுதிகளான கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகியவற்றின் மீது உரிமை கோரும் விதமாக, நேபாள அரசு புதிய வரைபடம் மசோதாவை நிறைவேற்றியது. இதையடுத்து, இந்தியப் பகுதிகளை உள்ளடக்கி நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டதால், தனது ஆட்சியை கவிழ்க்க இந்தியா முயற்சி செய்வதாக நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி போர்க்கொடி தூக்கியது. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் 44 உறுப்பினர்களில் 31 பேர் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர்.
தற்போது நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே கடும் அரசியல் நெருக்கடி சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், நேபாள நாட்டுக்கான சீன தூதர் ஹூ யான்கி, நேபாள நாட்டின் முன்னாள் பிரதமரும் என்சிபி கட்சியின் (நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி) துணைத் தலைவருமான பிரசண்டாவை அவரது இல்லத்தில் இன்று(ஜூலை.9) காலை 9 மணியளவில் சந்தித்து பேசியுள்ளார்.
இவர்களது சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் வரை நடைபெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதைத்தொடர்ந்து ஹூ யான்கி, கே.பி. சர்மா ஒலி, அதிபர் பித்யா தேவி பண்டாரி, என்சிபி கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்தும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பேசியுள்ளார்.
இதனிடையே நேற்று(ஜூலை.8) நடைபெறவிருந்த நேபால் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை கூட்டம் நாளை(ஜூலை.10) நடைபெற உள்ளது. இதில், கே.பி சர்மா ஒலி பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா அல்லது தொடர்ந்து பதவியில் நீடிப்பாரா என்பது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.