அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தை மூட அந்நாடு முடிவெடுத்துள்ள நிலையில், இதற்குப் பதிலடி தரும் வகையில் தென்மேற்கு சீன நகரான செங்டூவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீனா முடிவெடுத்தது. இதையடுத்து, அமெரிக்க அலுவலர்கள் அங்கிருந்து காலி செய்ததைத் தொடர்ந்து, அங்கு ஏற்றப்பட்டிருந்த அமெரிக்க கொடி இறக்கப்பட்டது.
இதனிடையே, அதை சுற்றியுள்ள பகுதியை சீன காவல்துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. இரு நாடுகளும் தொடர்ந்து பழி வாங்கும் செயலில் ஈடுபட்டுவருவதால் வணிகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, மனித உரிமை உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்க, சீன நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவருகிறது.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சீனாவிற்கு எதிராக ட்ரம்ப் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளாக விளங்கும் அமெரிக்கா, சீனாவிற்கு இடையே பனிப்போர் நீடித்துவருவதால் உலக பொருளாதாரத்தில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.