பல்லாண்டு காலமாக இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்திலிருந்த ஹாங்காங், 1997ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்றிலிருந்து, ஹாங்காங் சீனாவின் இரண்டு சிறப்புப் பிராந்தியங்களுள் ஒன்றாக விளங்கிவருகிறது.
பாதுகாப்பு, வெளியுறவுத் துறைகள் மட்டும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற அனைத்துத் துறைகளையும் ஹாங்காங் அரசு நிர்வகித்துவருகிறது.
ஆனால், ஹாங்காங் ஒப்படைக்கப்பட்ட நாளிலிருந்தே அதனைத் தனது முழுக் கட்டுப்பாட்டுக்குக்குள் கொண்டுவர வேண்டும் எனச் சீன அரசு அடுக்கடுக்காக அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவருகிறது.
இதனை எதிர்த்தும், ஜனநாயக உரிமை கோரியும் ஹாங்காங் மக்கள் பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்திவருகின்றன.
இதனிடையே, ஹாங்காங்கில் குற்றவியல் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படும் நபர்களைச் சீனாவுக்கு நாடு கடத்தி விசாரணை மேற்கொள்ளவதற்காக அந்நகர அரசு கடந்தாண்டு கைதிகள் பரிமாற்ற மசோதாவைக் கொண்டுவர முயன்றது.
ஆனால், இந்த மசோதா தங்களது ஜனநாயக உரிமைக்குக் குந்தகம் விளைவிக்கும் எனக் கூறி ஹாங்காங் மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்.