1996ஆம் ஆண்டு வரை பிரிட்டனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஹாங்காங் 1997ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு நாடு, இரு விதிமுறைகள் என்ற அடைப்படையில் ஹாங்காங்கிற்கு தன்னாட்சிக்கான அதிகாரங்கள் ஆரம்பத்தில் வழங்கப்பட்டு வந்தன.
இதன் முக்கிய நகர்வாக அண்மையில் அங்கு தேசியப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு பிடிகள் இறுக்கப்பட்டன. இதையடுத்து ஹாங்காங்வாசிகள் தங்கள் நாட்டிற்கு வந்து குடியேறலாம் எனவும், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் எனவும் பிரிட்டன் அரசு தெரிவித்திருந்தது.
இதற்கு சீன அரசு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் சாஹோ லிஜின் கூறுகையில், ”பிரிட்டன் இந்நடவடிக்கையை கைவிட வேண்டும். இல்லையென்றால், சீனாவின் பதிலடியை எதிர்கொள்ள வேண்டும். ஹாங்காங் சீனாவின் உள்நாட்டு விவகாரம். இதில் பிரிட்டன் தலையிடுவது முறையல்லை என்பதே சீன அரசின் உறுதியான நிலைப்பாடு” எனத் தெரிவித்துள்ளார்.
தற்போதையை நிலவரப்படி, சுமார் 30 லட்சம் ஹாங்காங்வாசிகள் பிரிட்டன் குடியுரிமையைப் பெறத் தகுதியுள்ளவர்களாக விளங்குகின்றனர். கல்வி, வேலைக்காக அவர்கள் ஆறு மாதம் வரை விசா இல்லாமல் பிரிட்டனில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிடனுக்கு நெருக்கடி கொடுக்கும் ட்ரம்ப்: கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?