தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தின் ஜிச்சாங் நகரை அடுத்துள்ள லூஜி மலையை உள்ளடங்கிய வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. இந்நிலையில், உள்ளூர் மக்கள் அலுவலர்களை தொடர்புகொண்டு விபத்து குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு விரைந்து வந்த தொழில்முறை தீயணைப்பு வீரர்கள், ராணுவத்தினர் உள்ளடக்கிய 1000க்கும் மேற்பட்டோர் தீயணைக்கும் பணியில் இறங்கினர். அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் அவசர கால அடிப்படையில் அங்கிருந்து வெளியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த காட்டுத் தீயால் பல கிராமங்கள், ஒரு பள்ளி, ஒரு ரசாயன ஆலை உள்ளிட்டவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சீன அரசின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்தால் அச்சுறுத்தப்பட்ட பகுதி லூஜியில் இருந்து எத்தனை பேர் இதுவரை வெளியேற்றப்பட்டனர் என்பது குறித்து எந்த எண்ணிக்கையும் வெளியிடப்படவில்லை.
இது குறித்து சிச்சாங் நகரைச் சேர்ந்த அரசத் தகவல் அலுவலர் கூறுகையில், “நேற்று பிற்பகல் ஒரு பண்ணையில் ஏற்பட்ட தீ, பலத்த காற்று காரணமாக அருகிலுள்ள மலைகளுக்கு விரைவாக பரவியது என சொல்லப்படுகிறது. இறப்புகள் எப்போது நிகழ்ந்தன என்பது சரியாக தெரியவில்லை, ஆனால் இறந்தவர்களில் ஒருவர் காட்டுப்பாதையின் வழிகாட்டி என அறிய முடிகிறது. மீதமுள்ள 18 பேரும் தீயணைப்பு வீரர்கள்”என அவர் தெரிவித்தார்.