சீனாவின் வூஹான் நகரத்தில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. சீனாவில் இந்த வைரஸால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதால், நாளுக்கு நாள் உயிரிழப்பின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில், கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 835 ஆக உயர்ந்திருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது. 79,251 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 427 பேருக்கு நோய் பரவியிருப்பதாகச் சீன சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், ஹூபே உள்ளிட்ட மாகாணங்களில் கொரோனா வைரஸ் நோயால் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸால் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாடள்களாக ஹூபே உள்ளிட்ட மாகணங்களில் பாதிப்பு கணிசமாகக் குறைந்துவருகிறது. இருப்பினும், சீனாவை விட வெளிநாடுகளில் தினசரி இந்த நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்த வைரஸால் தாக்குதலுக்கு எதிராக தற்போது நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
சீனாவில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 56 மில்லியன் மக்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த வைரஸ் தொற்று காரணமாக வூஹான் நகரம் முற்றிலும் முடங்கியுள்ளது. அங்குள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளன. அந்நாட்டின், பொருளாதாரம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது. இந்த நோயைக் கட்டுப்படுத்த சீன அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இதையும் படிங்க:ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போர் : அமெரிக்கா-தலிபான் இடையே இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து