உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக சீனாவில் இதுவரை 82 ஆயிரத்து 992 பேர் பாதிக்கப்பட்டும், நான்காயிரத்து 634 பேர் உயிரிழந்தும் உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க சீன அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கோவிட்-19 பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியிலிருந்து அங்கு கோவிட்-19 இறப்புகள் குறைந்த வந்ததையடுத்து வூகான் தலைநகரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவினை மார்ச் 30ஆம் தேதி சீன அரசு தளர்த்தியது.
இருப்பினும், கோவிட்-19 பாதிப்பு அறிகுறிகள் இல்லாமல் கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவுவது சீனாவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக வூகான் நகரம் அமைந்துள்ள ஹூபே மாகாணம் முழுவதும் இதுவரை 65 லட்சம் மக்களிடம் கரோனா பரிசோதனையை சீன சுகாதாரத் துறை மேற்கொண்டுள்ளது.
இந்தச் சூழலில், கடந்த சில நாள்களாக அறிகுறிகள் இல்லாமல் கரோனா நோய்த்தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுவருகிறது.
இந்நிலையில், நேற்று ஒரேநாளில் 36 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் அறிகுறிகள் எதுவும் இல்லாதவர்கள் என்று சீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.