சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கோவிட் 19 (கொரோனா) வைரஸ் தொற்று பரவத்தொடங்கியது. சீனாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவிய கோவிட் 19 வைரஸ் தற்போது அமெரிக்கா, இந்தியா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் வேகமாகப் பரவிவருகிறது.
மற்ற நாடுகளில் கோவிட் 19 வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்தாலும் சீனாவில் கடந்த சில நாள்களாகவே இதன் தாக்கம் படிப்படியாக குறைந்துவந்தது. அதிலும் குறிப்பாக ஹூபே மாகணத்தைத் தவிர மற்ற பகுதிகளில் வைரஸின் தாக்கம் பெரிதும் குறைந்துவிட்டது.
இந்நிலையில் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவிட் 19 வைரஸ் தொற்றால் நேற்று 22 பேர் மட்டுமே உயிரிழந்தனர். அதில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் ஹூபே மாகணத்தைச் சேர்ந்தவர்கள். புதிதாக 40 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.