உலகின் மிகப் பெரிய மொத்த உணவு சந்தையான ஷின்ஃபாடியில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கடந்த ஜூன் 11ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, ஷின்ஃபாடி சந்தை முற்றிலுமாக மூடப்பட்டு, சந்தையில் பணிபுரிந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், சந்தைக்கு அருகில் உள்ள குடியிருப்பில் வசிப்பவர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, 11 குடியிருப்புப் பகுதிகளை பெய்ஜிங் மாநகராட்சி மூடியது.
இதையடுத்து பெய்ஜிங்கில் உள்ள சுமார் 14 லட்சத்து 76 ஆயிரத்து 499 பேருக்கு அந்நாட்டின் சுகாதாரத்துறை கரோனா பரிசோதனை மேற்கொண்டது. அதில் 59 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பின்னர் பெய்ஜிங் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, சுகாதாரப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தொற்றுகள் பரவாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். எந்த உயிர் சேதமும் இல்லை. அதில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்த 225 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் ஆறில் இருவர் எவ்வித தொற்று அறிகுறியுமின்றி பாதிக்கப்படுவதாக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.