உலக நாடுகள் அனைத்தும் கரோனா வைரஸினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டிருக்கும் வேளையில், சீனா அண்டை நாடுகளின் நிலங்களை ஆக்கிரமிக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.
சில நாள்களுக்கு முன்பு, லாடக் பகுதியில் அமைந்துள்ள இந்திய- சீன எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தி, இந்திய எல்லை பகுதியில் அந்நாட்டு ராணுவத்தினர் ஊடுருவினர். இந்த செயலால் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவும் சூழல் ஏற்பட்ட நிலையில், இருநாட்டு, ராணுவ அலுவலர்களும் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டியதால், சீனப் படைகள் பின்வாங்கப்பட்டன. இதன் தாக்கமே இன்னும் சீராகாத நிலையில் தற்போது சீனா அண்டை நாடான பூட்டான் நிலப்பகுதிகளை குறிவைத்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சீனாவுக்கும் பூட்டானுக்கும் இடையிலான எல்லை இன்னும் வரையறுக்கப்படவில்லை. சீனாவின் நிலைப்பாடு சீரானதாகவும் தெளிவாகவும் உள்ளது. சீனாவுக்கும் பூட்டானுக்கும் இடையிலான எல்லை பிரிக்கப்படவில்லை, நடுத்தர, கிழக்கு மற்றும் மேற்கு பிரிவுகளில் சர்ச்சைகள் உள்ளன என்று கூறினார்.