உலகளவில் பல நாடுகளுக்கு, செவ்வாய்க் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்புவது கனவாக தான் இருக்கும். இதுவரை, செவ்வாய்க் கிரகத்தில் விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே; அதை எட்டு முறை செய்து அசத்தியுள்ளது.
தற்போது, இந்த வரிசையில் இணைவதற்காக சீனா, ஐக்கிய அரபு அமீரகம் தயாராகி வருகிறது. செவ்வாய்க் கிரகம் பூமிக்கு அருகில் வருவதைப் பயன்படுத்தி கொண்டு, சீன நாடு, தியான்வேன் 1 விண்வெளி திட்டத்தின்படி, லாங் மார்ச் -5 கேரியர் ராக்கெட்டை செலுத்தி செவ்வாய்க் கிரகத்தில் ரோவரைத் தரையிறக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த ராக்கெட் ஹைனானில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் செலுத்தப்படும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன விஞ்ஞானிகள் பல காலங்களாக இத்திட்டத்திற்காக அயராது உழைத்து வருகின்றனர்.
முன்னதாக, 2011ஆம் ஆண்டில் ரஷ்யாவுடன் இணைந்து, செவ்வாய்க் கிரகப் பயணத்தில் சீனா ஏவிய ராக்கெட் முயற்சி தோல்வியில் முடிந்தது. செவ்வாய்க் கிரகம் திட்டத்திற்குப் பயண தூரம் தான் பலருக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.