அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தை மூட அந்நாடு முடிவெடுத்துள்ள நிலையில், இதற்குப் பதிலடி தரும் வகையில் வூஹானில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீனா முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிடவில்லை. இருப்பினும், இதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இச்செயலைக் கண்டித்த சீனா, தூதரகம் மூடும் முடிவைத் திரும்பப்பெறவிட்டால் தகுந்த பதிலடி அளிக்கப்படும் என மிரட்டல் விடுத்தது. அமெரிக்காவில் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சீனாவிற்கு எதிராக ட்ரம்ப் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். இதனைத் தொடர்ந்து, உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளாக விளங்கும் அமெரிக்கா, சீனாவிற்கு இடையேயான உறவில் பதற்றம் நிலவிவருகிறது.