தற்போது உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கோவிட்-19 தொற்று சீனாவின் வூஹான் நகரில், கடந்தாண்டு இறுதியில் முதலில் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து சீனாவில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சீன அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, சீனா தற்போது மீண்டும் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது.
இந்நிலையில், சீனாவில் திங்கள்கிழமை மட்டும் புதிதாக 49 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்களில் 36 பேர் பெய்ஜிங் நகரைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்நாட்டின் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த 36 பேரும் ஷின்ஃபாடி சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேபோல தலைநகரின் வடமேற்கு பகுதியுள்ள ஹைடியன் மாவட்டத்திலுள்ள யுகாண்டோங் மொத்த சந்தையிலும் சிலருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது. இதனால் சீனாவில் மீண்டும் கரோனா பரவுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது.
இதையடுத்து, பெய்ஜிங் நகரைச் சுற்றிலுள்ள 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எத்தனை வீடுகள் இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஊரடங்கால் பாதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.