கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்க பல மருந்து நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும் ஆய்வில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் சீனாவில் செயல்பட்டுவரும் மருந்து தயாரிப்பு நிறுவனமான கான்சினோ பயோலாஜிக்ஸ் இங்க். சார்பாக கண்டுபிடிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிக்கு முதல் கண்டுபிடிப்பு காப்புரிமை அந்நாட்டு அரசு சார்பாக வழங்கப்பட்டுள்ளது.
தேசிய அறிவுசார் சொத்து நிர்வாகத்துடன் இணைந்து கோவிட்-19 காப்புரிமைக்காக கான்சினோ நிறுவனம் மார்ச் 18ஆம் தேதி விண்ணப்பித்திருந்தது. அன்றிலிருந்து மூன்று நாள்களுக்கு பிறகு அந்நிறுவனத்தின் முதல் கட்ட மருத்துவப் பரிசோதனைகள் நோயாளிகள் மீது செய்யப்பட்டன. இதன் முடிவுகள் ஆகஸ்ட் 11ஆம் தேதி வந்துள்ளன. இதன் பின்னர் கான்சினோ நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதைப்பற்றி அந்நாட்டு பிரபல பத்திரிகையான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கான்சினோ நிறுவனம் சார்பாக கண்டுபிடிக்கப்பட்டு மறுசீரமைப்பு அடினோவைரஸ் தடுப்பூசி எனவும், ad5-CoV எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.