கோவிட்-19 தொற்றின் தாக்கம் உலக நாடுகளில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்தத் தொற்றுக்கு தடுப்புமருந்தைக் கண்டுபிடிக்க உலெகங்கும் இருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கரோனாவுக்குப் பல வகையான தடுப்புமருந்துகளை உருவாக்க ஆய்வு பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், சீனாவில் நாசி வழியாக ஸ்ப்ரே மூலம் செலுத்தப்படும் கோவிட்-19 தடுப்புமருந்தின் மருத்துவ சோதனைக்கு சீனா தற்போது அனுமதியளித்துள்ளது.
இந்தக் கரோனா தடுப்புமருந்தின் முதல்கட்ட மருத்துவ சோதனை வரும் நவம்பர் முதல் வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 100 தன்னார்வலர்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் நாசி வழியாக செலுத்தப்படும் கரோனா தடுப்புமருந்தின் மருத்துவ சோதனைகளுக்கு அனுமதி அளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். நாசி வழியாக தடுப்புமருந்து செலுத்தப்படுவது இரட்டை பாதுகாப்பை உருவாக்கும் என்று இந்தத் தடுப்புமருந்தை உருவாக்கியுள்ள சீன ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும், நாசி வழியாக ஸ்ப்ரே மூலம் செலுத்தப்படும் கரோனா தடுப்புமருந்தை எளிதில் அதிகளவில் உற்பத்தி செய்து விநியோகிக்கலாம் என்றும் சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.