பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அல்ஆசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று லாகூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்த நவாஸ் ஷெரீஃப்புக்கு உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவச் சிகிச்சைக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அவருக்கு நான்கு வாரம் ஜாமின் வழங்கப்பட்டது. தற்போது, அவர் லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுமட்டுமின்றி இவர் மீது உள்ள பல ஊழல் வழக்குகளை அந்நாட்டின் தேசிய பொறுப்புடைமை முகமை தீவிரமாக விசாரித்துவருகிறது.
'கரோனா தொற்றால் நாட்டிற்குத் திரும்ப முடியவில்லை' - நவாஸ் ஷெரீஃப் - கரோனா தொற்றால் நாட்டிற்கு திரும்ப முடியவில்லை
லாகூர்: லண்டனில் சிகிச்சைபெற்றுவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், கரோனா தொற்று காரணமாக வெளியே செல்லக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், நாட்டிற்குத் திரும்ப இயலாது என நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
இந்நிலையில், நவாஸ் ஷெரீஃப்பின் சார்பில் அவருடைய ஆலோசகர் அம்ஜத் பெர்வைஸ் லாகூர் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மருத்துவ அறிக்கையில், "கரோனா தொற்று காரணமாக நான் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் எனக்கு குறைந்த பிளேட்லெட் செல்கள் எண்ணிக்கை, நீரிழிவு நோய், இதயம், சிறுநீரகக் கோளாறு, ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னைகள் உள்ளன. இதயத்திற்குப் போதுமான அளவு ரத்தம் செல்லாத காரணத்தால், கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, கரோனா தொற்று பாதிப்பு குறையும் வரையும், உடல்நிலை முன்னேற்றம் அடையும் வரை என்னால் சொந்த நாட்டிற்கு திரும்ப இயலாது" எனக் குறிப்பிட்டிருந்தார்.