கோவிட்-19 தொற்று காரணமாக முன்னதாகவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாடுகளில் ஒன்று நியூசிலாந்து. அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் எடுத்த முக்கிய நடவடிக்கைகள் காரணமாக நியூசிலாந்து கரோனா பரவல் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.
வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, நியூசிலாந்தில் அமல்படுத்தப்பட்ட எச்சரிக்கை நான்காம் நிலையிலிருந்து மூன்றாம் நிலைக்குக் குறைக்கப்படுவதாகவும் உணவகங்களும், கடைகளும் ஐம்பது விழுக்காடு இருக்கைகளுடன் செயல்படத் தொடங்கலாம் என்றும் ஜெசிந்தா கடந்த வாரம் அறிவித்தார்.
இந்நிலையில், நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனிலுள்ள ஒரு பிரபல உணவகத்திற்குக் காலை சிற்றுண்டிக்காக ஜெசிந்தா ஆர்டெர்ன், தனது வருங்கால கணவர் கிளார்க் கேஃபோர்ட் மற்றும் நண்பர்களுடன் சென்றுள்ளார். அந்த உணவகத்திலிருந்த 50 விழுக்காடு இருக்கைகளும் நிரம்பியிருந்ததால், பிரதமரையும் அவரது நண்பர்களையும் உள்ளே அனுமதிக்க ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.