கத்தார் நாட்டில், ஆப்கானிஸ்தான் அரசு - தாலிபான் அமைப்புக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை தொடங்கியதிலிருந்தே, ஆப்கானிஸ்தான் நாட்டில் வன்முறை, வெடிகுண்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், நேற்று (அக்.25) மேற்கு காபூல் பகுதியில் உள்ள ஒரு கல்வி மையத்திற்கு வெளியே தற்கொலை தாக்குதல் நடந்தது. அப்போது, பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியவர்களைத் தடுத்துநிறுத்த முற்பட்டபோது கல்வி மையத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்டனர். இதில் 18 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
பள்ளி குழந்தைகள் உள்பட 57 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த குண்டுவெடிப்புக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என தாலிபான் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கல்வி மையம் ஒன்றில் தாக்குதல் நடைபெற்றது. அதில் 34 மாணவர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு சிறுபான்மை சமூகமான ஷியாக்கள், சீக்கியர்கள், இந்துக்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்திவருகிறது.
காபூலில் உள்ள சீக்கிய வழிபட்டுத் தலங்களில் கடந்த செப்டம்பர் மாதம் பிரிவினைவாத அமைப்பு நடத்திய தாக்குதலில், 25 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஆப்கானிஸ்தானில் நூற்றுக்கும் மேற்பட்ட சீக்கியர்களும், இந்துக்களும் நாட்டை விட்டு வெளியேறினர்.