கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி, மியான்மரில் ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. அதனைத் தொடர்ந்து, ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு புரட்சி வெடித்தது. தொடர்ந்து, பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்வேறு தரப்பினரும் அறவழியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அவர்களை ஒடுக்கும்விதமாக அந்நாட்டு ராணுவம் மக்களை தொடர்ந்து கொன்று குவித்து வருகிறது. அந்த வகையில், ராணுவ அடக்குமுறையால் முன்னதாக உயிரிழந்த மாணவர் ஒருவரின் இறுதிச் சடங்கில் நேற்று முன் தினம் (மார்ச்.27) கலந்துகொண்ட நபர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், குறைந்தபட்சம் 114 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கொல்லப்பட்டவர்களுள் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் அடக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு ஊடகங்கள் உறுதிபடுத்தியுள்ளன.