சீன அதிபர் ஷி ஜிங்பிங்-கின் தலைமை கேள்விக்கு உள்ளாகி ஆட்டம் கண்டுள்ளதா? ஹாங்காங்-ல் இந்திய, அமெரிக்க நலன் பெரும் பாதிப்புக்கு உள்ளாகுமா?
ஹாங்காங் தெருக்களில் மக்களின் போராட்டம் புதிய உத்வேகத்துடன் மீண்டும் வெடித்துக் கிளம்பியுள்ளது. சீன அரசு சென்ற மாதம் கொண்டுவந்துள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிளர்ந்தெழுந்த வீரியம் மிக்க வெகுஜன போராட்டத்தின் தொடர்ச்சியான இதனைப் பிரிவினைவாத மற்றும் நாசகார சக்திகள் தூண்டிவிடுவதாக சீனா குற்றம் சாட்டுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டை ஜனநாயக ஆதரவு போராட்டத் தலைவர்கள் முற்றாக மறுத்து, சீன அரசின் திசை திருப்பும் முயற்சி என்று வர்ணிக்கிறார்கள்.
150 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டனின் காலனியாக இருந்த ஹாங்காங், 1997ல் ‘ஒரே நாடு, இருவேறு நிர்வாக அமைப்பு’ என்ற ஒழுங்குமுறை ஏற்பாட்டின்படி, சிறப்பு அந்தஸ்தும் தன்னாட்சியும் உள்ள பிராந்தியமாக சீனாவிடம் கையளிக்கப்பட்டது. இவ்வாறு, சிறப்பு தன்னாட்சி பிராந்தியமாக உதயமான ஹாங்காங், கம்யூனிச சீனாவில் இருந்து வேறுபட்ட தனித்துவமான நீதித்துறை, அரசியல்-சட்ட அமைப்பு ஆகிவயவற்றைக் கொண்டுள்ளது. மேலும், செஞ்சீனத்தைப் போல் அல்லாமல், ஹாங்காங்-கில் பேச்சு சுதந்திரமும், ஒன்றுகூடும் உரிமையும் உண்டு.
சென்ற ஆண்டு ஜூன் மாதம், சீன அரசு கொண்டுவந்த ’குற்றவாளிகளை நாடுகடத்தும் சட்டம்’ (ஹாங்காங்-கில் இருந்து சீனாவுக்கு) பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வரலாறு காணாத அளவிற்கு பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் குதித்தனர். ஹாங்காங் அதிர்ந்து குலுங்கியது. போராட்டத்தின் வீரியத்தைக் கண்டு பின்வாங்கிய சீன அரசு, கடந்த செப்டம்பர் மாதம் அந்த சர்ச்சைக்குரிய சட்டத்தை வேறு வழியின்றி திரும்பப் பெற்றுக் கொண்டது. இந்த சட்டம் அமலுக்கு வந்திருந்தால், ஹாங்காங்-கின் சுதந்திர நீதி பரிபாலன அமைப்பிற்கு வேட்டு வைப்பதுடன், சர்வாதிகார சீன அரசை விமர்சிக்கும் ஜனநாயக மற்றும் மாற்று சிந்தனை செயற்பாட்டாளர்களின் உயிருக்கு உலைவைப்பதாக மிகுந்த ஆபத்தானதாக இருந்திருக்கும் என்ற பெரும் அச்சத்தை அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர். சீனா சட்டத்தை திரும்பப் பெற்றுக்கொண்டாலும், போராட்டங்கள் ஓயவில்லை. போராட்டக்காரர்களும், அவற்றை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களும் முழுமையான ஜனநாயகம் கோரி, காவல்துறையின் அத்துமீறல்கள் குறித்த விசாரனை வேண்டியும் களத்தில் உறுதியாக நின்றனர்.
இந்நிலையில், புதிதாக சீன அரசு கொண்டுவந்துள்ள தேச பாதுகாப்பு சட்டம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலாயிற்று. போராட்டம் மேலும் தொடர காரணமாயிற்று. அரசியல் விமர்சகர்களின் பார்வையில், ஹாங்காங் தொடர் போராடங்களால் சீன அதிபர் ஷி ஜிங்பிங்-கின் தலைமையும் அதிகாரமும் கேள்விக்கு உள்ளாகி ஆட்டம் கண்டிருக்கிறது. இந்திய ஆய்வாளர்களின் கருத்துப்படி, இமயமலைப் பகுதியின் எல்லைக் கட்டுப்பட்டு கோட்டை மீறிய சீனாவின் ஆக்கிரமிப்பின் பின்னணியில், ஹாங்காங் மற்றும் தைவான் நிகழ்வுகளின் நிழல் பதிந்துள்ளது. காரணம், இந்த நிகழ்வுகளை ஒட்டி உள்நாட்டில், குறிப்பாக சீன கம்யூனிஸ்ட் கட்சியில், ஷி ஜிங்பின் தலைமைக்கு எதிராக இதுவரை இல்லாத கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
மூத்த பத்திரிக்கையாளர் ஸ்மிதா ஷர்மா ஹாங்காங் கள நிலவரம் குறித்தும், முதன்மையான கோரிக்கைகள் மற்றும் தொடரும் போராட்டத்தின் சர்வதேச தாக்கம் பற்றியும் குடிமைக் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆல்வின் யேயுங்-உடன் விரிவான உரையாடலை மேற்கொண்டார். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஹாங்காங் உள்ளாட்சித் தேர்தலில் பல கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக இயக்கம் மாபெரும் வெற்றிபெற்றது. மொத்தம் உள்ள 18 உள்ளாட்சி மன்றங்களில், 17 மன்றங்களைக் கைப்பற்றி, முழுமையான ஜனநாயகத்திற்கான போராட்டத்தை தொடர்கிறது.
தனிமனித உரிமைகளை மறுக்கும் தேச பாதுகாப்பு சட்டத்தை முற்றாக நிராகரிக்கும் ஹாங்காங் மக்கள் தங்கள் தன்னாட்சி பிராந்தியத்தின் அடிப்படை சட்டம் உறுதியளித்துள்ளதற்கு ஏற்ப கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று விளக்குகிறார் ஆல்வின். பெருவாரியான மக்கள் பிரிவினையை ஆதரிக்கவில்லை, மக்களிடையே அது எடுபடாது என்று கூறும் அவர், சீனா என்றுமே ‘ஒரே தேசம் – இருவேறு நிர்வாக அமைப்பு” என்ற திட்டத்தையோ, தன்னாட்சியையோ மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். மேலும், சீன மேலாதிக்கத்திற்கு எதிராக பேசுவோர், சீன அரசின் கடும் அச்சுறுத்தலையும், கொடூரமான பழிவாங்கும் நடவடிகையையும் எதிர்கொள்ளவேண்டி இருந்தாலும், இந்த ’தலைமையற்ற’ தன்னெழுச்சியான போராட்டம் தொய்வின்றி தொடரும் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.
இதோ முழுமையான நேர்கானல்:
கேள்வி: புதிய சட்டம் தேச பாதுகாப்பை உறுதி செய்யவும் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தவும் மட்டுமே என சீன அரசு விளக்கம் அளிக்கிறது. இந்த வாதம் ஏற்புடையதா? உங்கள் எதிர்வினை என்ன?
ஆல்வின் யேயுங்: ”ஒரே தேசம் – இருவேறு அமைப்பு” என்ற முறைமையின் அடிப்படையில், ஹாங்காங்-கிற்கு என தனிப்பட்ட சட்ட திட்டங்கள் உண்டு. எம்மை ஆள, எங்களுக்கென்ற தன்னளவிளான சிறு அரசியல் சாசனம் – அடிப்படை சட்டம் - இருக்கிறது. தேச பாதுகாப்பு பற்றி அடிப்படை சட்டத்தில் மிகத் தெளிவாக ஒரு உறுப்பு உள்ளது. அதன்படி, தேச பாதுகாப்பு குறித்து ஹாங்காங் அரசே தகுந்த, தேவையான சட்டங்களை இயற்ற வேண்டும். எனவே, இந்த விஷயம் ஹாங்காங் சிறப்பு தன்னாட்சி பிராந்தியத்தின் கீழ் வருவதாகும். மேலும், இது ஹாங்காங் மக்களே தீர்மாணிக்க வேண்டிய உள்விவகாரம். சீன அரசின் தலையீடு தேவையற்றது. 2003-ஆம் ஆண்டு, ஹாங்காங் அரசு ஒரு சர்ச்சைக்குரிய தேச பாதுகாப்பு மசோதாவைக் கொண்டுவந்தது. அந்த சட்டத்தை எதிர்த்து ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். அதன் பின்னர் எந்த அரசும் அது போன்றதொரு சட்டத்தைக் கொண்டுவர துணியவில்லை. ஏனென்றால், அந்த சட்டம் அந்த அளவு சர்ச்சைக்குரியது. மேலும், எங்களது உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது அத்தியாவசியமாகிறது. காரணம், ஹாங்காங் இன்னும் முழுமையான ஜனநாயகத்தைக் கொண்டிருக்கவில்லை. எமது நாடாளுமன்றத்தில் பாதி இடங்களுக்கு மட்டுமே மக்கள் பங்குபெறும் நேரடி தேர்தல் உண்டு. இது போதும், ஹாங்காங் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு இல்லை என்பதைத் தெளிவாகக் காட்ட. எனவேதான், மக்கள் தேச பாதுகாப்பு சட்டத்தினை எதிர்க்கிறார்கள். இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் தங்கள் உரிமைகள் பறிபோகும் என்ற அச்சம் அனைவருக்கும் உள்ளது.
சென்ற ஆண்டில் இருந்தே போராடி வருகிறோம். போராட்டம் தொடங்கியது ‘நாடு கடத்தல்’ சட்டத்தை எதிர்த்து. அப்போதிருந்தே, காவல் துறையின் அராஜகத்தையும் அடக்குமுறையையும் சந்தித்து வருகிறோம். ஆனால், அரசு காவல்துறையின் அத்துமீறல்களைக் கண்டுகொள்ளவில்லை, அதன் விளைவுகளைப் பற்றி கவலைகொள்ளாமல், காவல்துறைக்கு முழு ஆதரவு அளித்துவருகிறது.
அடிப்படை சட்டத்தை முடக்குவது பற்றியோ, வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்தோ, பெய்ஜிங் அரசுக்கு சிறிதும் கவலையும் அக்கறையும் இல்லை. ஆனால், மக்கள் விருப்பத்தை அறியாமல் தேச பாதுகாப்பு சட்டத்தைத் திணிப்பதில் அதீத தீவிரம் காட்டி வருகிறது. நாடாளுமன்றத்தை உதாசீனப்படுத்தியதுடன், தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய மக்களுக்கு எந்த ஒரு வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்பது வேதனையான் ஒன்று.
கேள்வி: ஹாங்காங்-கில் நிலவும் கொந்தளிப்புக்கு ‘வெளி நாட்டு சக்திகள்’ தான் காரணம் என்று குற்றம்சாட்டும் சீனா, ஜனநாயக போராளிகளை தீவிரவாதிகள் என்றும் வன்முறையாளர்கள் என்றும் முத்திரை குத்துகிறதே?
அனைத்து சர்வாதிகார அரசுகளும் அப்படித்தான். தங்கள் குறைகளை மறைத்து மக்கள் மீது பழி சுமத்துவதில் விதிவிலக்குகள் கூட இல்லை. மேலும், இதில், அவர்களுக்கிடையே வேறுபாடு ஏதுமில்லை. எல்லோரையும் குறைகூறுவதே அவர்களின் இயல்பு. எதிர்க்கட்சிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என அனைவரையும் ‘வெளி நாட்டு சக்க்திகள்’ என்று முதிரை குத்துவார்கள். ஆனால், எந்த ஒரு ஆதாரத்தையும் வெளியிட மாட்டார்கள். தங்கள் செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்யும் துணிவு சிறிதளவும் இல்லாதவர்கள். இந்த அரசின் பிழை என்னவென்றால், தவறை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் பெருந்தன்மையும் இல்லாமையே. ஹாங்காங் மக்களின் கண்களைப் பார்த்து, ஆம் நாங்கள் தவறு செய்துவிட்டோம், எங்கள் ஆட்சியில் குறைபாடு உள்ளது அதனை சீர் செய்வோம் என முன்வரவேண்டும். மாறாக, த்னது குறைகளைக் களைவதை விட்டு அரசின் பிரதான செயல்பாடு எங்கள் ஒவ்வொருவர் மீது குற்றம் சுமத்துவதாகவே உள்ளது.
கடந்த ஆண்டு, சர்ச்சைக்குரிய சட்டத்தை நிறைவேற்ற இயலாமல் பிரச்சனைகளுக்கு வித்திட்டது அரசு. இந்த வருடம், பிரச்சனையை தீர்க்க, முந்தையதை விட மோசமான சட்டத்தைத் திணிக்க முயற்சிக்கிறது.
கேள்வி: போராட்டக்காரர்களின் கோரிக்கைகள்தான் என்ன? சீனாவிலிருந்து தனியே பிரிந்து செல்லும் கோரிக்கையும் உள்ளதா? பிரிவினைக்கு எந்த அளவு ஆதரவு உள்ளது?
ஒரு சிலர் மட்டுமே பிரிவினையை முன்வைக்கிறார்கள். ஆனால், பெருவாரியான மக்களிடம் அதற்கு ஆதரவில்லை. கடந்த ஆண்டில் இருந்தே, ஹாங்காங் மக்கள் ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போராடுகின்றனர். அனைவருக்கும் வாக்குரிமை எமக்கான அரசை நாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தருகிறது. ஹாங்காங் அடிப்படை சட்டம் இந்த உரிமையை உத்தரவாதப்படுத்துகிறது.
நாங்கள் நிலவைத் தருமாறு கேட்கவில்லை. காவல்துறை அராஜகம் குறித்த சுதந்திரமான விசாரணை வேண்டுகிறோம். இந்த விசாரணையை மேற்கொள்ள ஒரு உயர்மட்ட குழு அமைப்பதை அரசு நிராகரித்து வருவது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. அரசியல் காரணங்களுக்காக மக்கள்மீது வழக்குகள் பதிவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இத்தகைய அரசியல் பழிவாங்கல் முற்றிலும் தவறானது. எமது இந்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று யாராவது சொல்ல முடியுமா? இல்லை அல்லவா. சுதந்திர உலகில், மிக சாதாரனமாக, மக்கள் குரல் எழுப்பாமலேயே ஒரு அரசால் நிறைவேற்றப்பட்டிருக்கும்.
அமெரிக்க நிலைப்பாடும் அமெரிக்க நலனும்
கேள்வி: தற்போது அமெரிக்கா உலக அளவில் தனது பங்களிப்பைக் குறைத்துக்கொண்டு, கடமையை விலக்கிக்கொண்டு பன்னாட்டு அமைப்புகளில் இருந்து வெளியேறி வருகிறது. இத்தகைய சூழலில், அமெரிக்க அரசு, ஹாங்காங் குறித்து வெளியிடும் அறிக்கைகள் உங்கள் நிலைப்பட்டுக்கு வலு சேர்க்கிறதா அல்லது நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறதா?