கோவிட்-19 தொற்று பரவலின் தாக்கம் உலக நாடுகளில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சமூக விலகல் பின்பற்றப்படுவதுதான் ஒரே வழி என்பதால் பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
அதேபோல் வங்கதேசத்திலும் வரும் ஏப்ரல் 25ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஊரடங்கைப் பற்றி சிறிதும் கவலையின்றி இறுதிச் சடங்கில் பங்கேற்க சுமார் ஒரு லட்சம் மக்கள் ஒரே இடத்தில் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் பிரம்மன்பரியா என்ற மாவட்டத்திலுள்ள சரயில் கிராமத்தில் இஸ்லாமிய மத குரு சில நாள்களுக்கு முன் இறந்துள்ளார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க சுமார் ஒரு லட்சம் மக்கள் மாஸ்க் போன்ற பாதுகாப்பு உபகரணங்களைக்கூட அணியாமல் பொறுப்பற்ற வகையில் ஒரே இடத்தில் கூடியுள்ளனர். இவர்களில் பலர் வங்கதேச தலைநகர் டாக்காவிலிருந்து வந்துள்ளனர்.