வங்கக் கடலில் உருவான அதி உச்ச உயர் தீவிரப் புயலான ஆம்பன், மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவை ஒட்டியுள்ள சுந்தரவனக் காடுகள் இடையே கரையைக் கடந்தது. இந்நிலையில் ஆம்பன் புயலால் மேற்கு வங்கத்துக்கு ஏற்பட்ட சேதம் தேசியப் பேரிடருக்கும் அதிகமானது என்று கூறலாம் எனவும்; என் வாழ்வில் இதுபோன்ற புயலை நான் பார்த்தது இல்லை எனவும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் 60 விழுக்காடு மக்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆம்பன் காரணமாக நெருக்கடி ஏற்பட்ட இந்த நேரத்தில் வங்காள மக்களுக்கு தனது ஆதரவையும் கவலைகளையும் தெரிவிக்க தனிப்பட்ட முறையில் என்னை அழைத்ததற்காக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்-ஜிக்கு நான் மனமார்ந்த நன்றி கூறுகிறேன். நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.