இந்தியாவுடனான எல்லைப் பகுதியை வங்கதேசம் ஜூன் 30ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. எல்லைப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து மோசமடைந்துவரும் நிலையில் எல்லைப் பகுதியை மூடும் உத்தரவை வங்கதேசம் நீட்டித்துள்ளது.
இந்த முடிவானது நேற்று (ஜூன் 13) நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது எடுக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏப்ரல் 26 அன்று, வங்க தேசம் இந்தியாவுடனான எல்லையை இரண்டு வாரங்களுக்கு மூடியது, பின்னர், மே 8 மற்றும் மே 29 ஆகிய இரண்டு தேதிகளும் இந்தியாவில் கரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக, எல்லை மூடல் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது.
இருப்பினும், 15 நாள்கள் அல்லது அதற்கும் குறைவான செல்லுபடியாகும் நுழைவு அனுமதி கொண்ட வங்கதேச குடிமக்கள் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குள்பட்டு வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க தேசத்தில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. நேற்று மட்டும் 47 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்றால் 2436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் கரோனா வைரசின் டெல்டா மாதிரி பரவிவருவதை சுகாதாரத் துறையினர் கண்டறிந்துள்ளனர்,