உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் மலையில் ஏற, ஓராண்டிற்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சிகரம் 8 ஆயிரத்து 849 மீட்டர் உயரம் ஆகும். கரோனா தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் இங்கு மலை ஏற தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் மலை ஏற பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், எவரெஸ்ட் மலையில் ஏற பஹ்ரைன் இளவரசர் ஷேக் முகமது ஹமாத் முகமது அல் கலீஃபா(Sheikh Mohamed Hamad Mohamed Al Khalifa) உட்பட 16 பேர் அடங்கிய குழுவினர், நேபாளத்திற்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று(மார்ச்.15) தனி விமானத்தில், காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். கரோனா அச்சம் காரணமாக, அனைவரும் 7 நாள்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். அதன் பிறகே, மலை ஏறும் முயற்சியில் களமிறங்கவுள்ளனர்.