ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்பு, அங்கிருக்கும் மக்கள் உயிருக்கு பயந்து சொந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
அமெரிக்க விமானத்தில் ஏற நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் முயன்றது, விமான டையரில் தொங்கிக்கொண்டு சென்று நடுவானிலிருந்து கீழே விழுந்து இறந்தது போன்ற கோர சம்பவங்களைக் கடந்த சில நாள்களாகவே பார்த்து வருகிறோம்.
குறிப்பாக, கடுமையான கூட்ட நெரிசலுக்கு மத்தியில் காபூல் விமான நிலையத்தின் சுவருக்கு பின்னால் உள்ள அமெரிக்க வீரர்களிடம் குழந்தை ஒன்று ஒப்படைக்கப்படுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரின் மனதை உலுக்கியது.
ஆப்கன் குழந்தை தந்தையிடம் ஒப்படைப்பு குழந்தையாவது உயிர் பிழைக்கட்டும் என அமெரிக்க வீரர்களிடம், ஆப்கன் தம்பதி கொடுத்துவிட்டதாக செய்திகள் பரவின. இருப்பினும், அங்கு என்னதான் நடந்தது என்பது இன்னும் யாருக்கும் தெரியாத புதிர். தற்போது, அதற்கான விடை கிடைத்துள்ளது.
இதுகுறித்து பேசிய பென்டகனின் செய்தித் தொடர்பாளரான ஜான் கிர்பி, "குழந்தையின் உடல்நிலை சரியில்லாததால், சிகிச்சைக்காகவே அக்குழந்தை அமெரிக்க வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
விமான நிலையத்தில் உள்ள நார்வே மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. உடல்நிலை சீரானதை தொடர்ந்து, அக்குழந்தை தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஆப்கானிஸ்தானிலிருந்து ஏஞ்சலினா ஜோலிக்கு வந்த கடிதம்