அர்மேனியா-அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே தற்போது போர் மேகம் சூழ்ந்துள்ளது. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பகுதிகளான இந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைப் பகுதி தொடர்பாக 1994ஆம் ஆண்டு முதல் கடுமையான மோதல் போக்கு நிலவிவருகிறது.
சர்ச்சைக்குரிய பிராந்தியமான நகோர்னோ-காாராபக் பகுதியில் இரு நாடுகளும் தற்போது சண்டையிட்டு வருகின்றன. மலைப்பகுதியான இங்கு அசர்பைஜான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 31க்கும் மேற்பட்ட அர்மேனியப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லைப் பகுதியை பாதுகாக்க அர்மேனிய படையினர் உத்வேகத்துடன் போராட வேண்டும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த மோதலில் அசர்பைஜான் நாட்டிற்கு தனது ஆதரவைத் தருவதாக மற்றொரு அண்டை நாடான துருக்கி தெரிவித்துள்ளது. அசர்பைஜானுக்கு ராணுவ ரீதியான உதவிகளையும் துருக்கி தரவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அர்மேனியா மற்றும் அசர்பைஜான் நாடுகள் சோவியத் யூனியனின் அங்கங்களாக இருந்துள்ளன. சோவியத் ரஷ்யா உடைந்த பின்னர் கிறித்துவர்கள் பெரும்பான்மையாக உள்ள அர்மேனியா ஒரு நாடாகவும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள அசர்பைஜான் மற்றொரு நாடாகவும் உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சிகிச்சையில் உள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்த ஜெர்மனி அதிபர்