ஆஸ்திரேலியாவில் சமீப காலங்களாகக் காட்டுத்தீ அசுர வேகத்தில் பரவிக் கொண்டு இருக்கிறது. இப்போது வரை, 2.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள், நூற்றுக்கணக்கான வீடுகள் முற்றிலுமாக எரிந்து சாம்பல் ஆகியுள்ளன. இதைத் தவிர ஆஸ்திரேலியாவின் வசிக்கும் உயிரினமான 350க்கும் மேற்பட்ட கோலா கரடிகளும் உயிரிழந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல கரடிகள் உடலில் தீக்காயங்களுடன் காப்பாற்றப்பட்டு, மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் தப்பிக்க முடியாமல் தவிக்கும் கோலா கரடியைப் பெண், தனது மேலாடையைக் கழற்றி காப்பாற்றும் காணொலி பரவி வருகிறது.
அதில், கோலா உடலில் தீக்காயம் ஏற்பட்ட வலியுடன் கதறிக்கொண்டே, அது ஏற முயற்சிக்கும் மரத்தை நோக்கிச் செல்கிறது. இதைப் பார்த்த பெண், மரத்தில் ஏறினால் வரும் ஆபத்தை உணர்ந்து, கோலாவை நோக்கி விரைந்து ஓடிச் சென்றார். அங்குச் சென்றதும் தனது மேலாடையைக் கழற்றி கோலா கரடியைப் பத்திரமாகப் போர்த்தி மீட்கிறாள். மேலும், கோலா தொடர்ந்து வலியால் கதறுவதால், எரிந்த பகுதிக்கு மேல் தண்ணீரை ஊற்றிவிட்டு, ஒரு போர்வையில் கோலா கரடியை போர்த்தி பாதுகாப்பிற்குக் கொண்டு செல்கிறாள்.
இதுகுறித்து ஊள்ளூர் செய்தி நிறுவனம் கூறுகையில், கோலா கரடியைக் காப்பாற்றும் பெண்ணின் பெயர் டோனி டஹெர்டி. இவர் கோலா கரடி சாலையைக் கடந்து எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை நோக்கிச் செல்வதைப் பார்த்ததும், உடனடியாக யோசிக்காமல் கோலாவைக் காப்பாற்ற நெருப்பு பகுதியை நோக்கி ஓடி வந்தார் எனத் தெரிவித்தனர்.
தற்போது, இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொலி பகிர்ந்த மக்கள், பெண்ணின் வீர சாகசத்தைப் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: செவ்வாயில் ஜீவராசிகள்.. அமெரிக்க விஞ்ஞானி நம்பிக்கை..!