சிட்னி: கரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு மே மாதம் ஆஸ்திரேலியாவின் பன்னாட்டு எல்லை அடைக்கப்பட்டது. குடிமக்களில் குறிப்பிட்ட அளவினருக்கும், நிரந்தர குடியுரிமை வைத்திருப்பவர்களுக்கும் மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது.
சில நாள்களாக இந்த விதிகளில் அந்நாட்டு அரசு தளர்வுகளை அறிவித்து வந்தது. விக்டோரியா மாகாணத்தில் (Victoria State) மட்டும் கரோனா தொற்று நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பதிவாகி வருகிறது. ஆனால், பிற பகுதிகளில் கரோனா தொற்று பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மட்டும்
எனவே, வரும் டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து தகுதியான வெளிநாட்டு நுழைவு இசைவு சீட்டு (VISA) இருக்கும் மாணவர்கள், தொழிலாளர்கள், போன்றோர் முழுமையான தடுப்பூசியை செலுத்தியிருக்கும்பட்சத்தில் (ஆஸ்திரேலியா மருந்து நிர்வாக அமைப்பால் அங்கீகாரம் பெற்ற தடுப்பூசிகள் மட்டும்) ஆஸ்திரேலியா வரலாம் (Australia Welcomes) என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நேற்று (நவம்பர் 22) செய்தியாளர் சந்திப்பில் ஸ்காட் மாரிசன் கூறியதாவது, "திறன்சார் தொழிலாளர்கள், மாணவர்கள் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்புவது பொருளாதார மீட்சிக்கு மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும். தென் கொரியா, ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் முழுமையான தடுப்பூசி செலுத்தியிருந்தால் ஆஸ்திரேலியா வரலாம்" என்று தெரிவித்திருந்தார்.